ஊஞ்சல் கயிறால் பறிபோன பிஞ்சு உயிர்... சோகத்தில் பெற்றோர்... அறிவுறுத்தும் காவல்துறை...

சென்னை வேளச்சேரி அருகே 8 வயது சிறுமி ஒருவர், வீட்டின் ஜன்னல் கம்பியில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 27, 2024 - 21:59
ஊஞ்சல் கயிறால் பறிபோன பிஞ்சு உயிர்... சோகத்தில் பெற்றோர்... அறிவுறுத்தும் காவல்துறை...

வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரை சேர்ந்தவர்கள் உதயா - சரண்யா தம்பதி. இவர்களது 8 வயது மகளான அஸ்வந்தி, பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். விடுமுறை காரணமாக மகளை வீட்டில் விட்டுவிட்டு, இருவரும் கூலி வேலைக்காக வெளியில் சென்றுள்ளனர். 

வேலை முடிந்து இருவரும் இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியே பார்த்தபோது, மகள் அஸ்வந்தி ஜன்னல் கம்பியில் கட்டியிருந்த ஊஞ்சலில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ந்துள்ளனர்.  

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால் மூச்சு பேச்சு இன்றி கிடக்கும் மகளை கண்டு கதறியழுத பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளி விடுமுறை காலங்களில் சிறுவர் சிறுமியரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையும், காவல்துறையும் கூறி வரும் சூழலில், இதுபோன்ற சம்பவங்களால்,  பிள்ளைகளை தனியாக விட்டுச்செல்ல வேண்டாம் என்றும், யாராவது உடன் இருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow