அப்பாடா! 10 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா... பரிதாபமாக வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
இந்த முறை எந்த தோல்வியும் இல்லாமல், மழை எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாமல் தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் நுழைந்தது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அதே வேளையில் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
நார்த் சவுண்ட்: டி20 உலகக்கோப்பை 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா 10 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் 'சூப்பர் 8' சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்ட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து பரிதவித்தது. ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் 1 ரன்னுக்கும் அவுட் ஆனார்கள். பின்பு ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ் அணியை மீட்டனர்.
12 ஓவரில் ஸ்கோர் 86 ஆக இருந்தபோது, மேயர்ஸ் (35 ரன்) அவுட் ஆனார். அதன்பிறகு மீண்டும் தடம்புரண்ட வெஸ்ட் இண்டீஸ் வரிசையாக விக்கெட் இழந்தது. ரோமன் பவல் (1), ரூதர் போர்டு (0), ஆன்ட்ரே ரஸல் (15), அகில் ஹுசைன் (6) என தொடர்ந்து நடையை கட்டினார்கள்.
தனிமனிதனாக போராடிய ரோஸ்டன் சேஸ் அரைசதம் (42 பந்தில் 52 ரன்) அடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 135/8 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் ஷம்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணியும் 15/2 என பரிதவித்தது. குயின்டன் டி டாக் (12), ரீசா ஹென்ரிக்ஸ் (0) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு சிறிது நேரத்துக்கு பின்னர் தொடங்கியது.
தென்னாப்பிரிக்கா அணி 16 ஓவரில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியதும் மார்க்ரம் (18 ரன்) உடனே அவுட் ஆனாலும், பின்பு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (27 பந்தில் 29 ரன்), அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் (10 பந்தில் 22 ரன்) கணிசமான பங்களிப்பு செய்தனர்.
இறுதிக்கட்டத்தில் மார்கோ யான்சன் அதிரடியாக விளையாடி (14 பந்தில் 21) அணியை வெற்றி பெற வைத்தார். 16.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்த தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா நுழைந்துள்ளது. கடைசியாக 2014ம் ஆண்டு அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறி இருந்தது.
இந்த முறை எந்த தோல்வியும் இல்லாமல், மழை எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாமல் தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் நுழைந்தது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அதே வேளையில் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
What's Your Reaction?