திருச்செந்தூர் கடலில் தொலைந்த 5 சவரன் சங்கிலி.. கண்ணீர் விட்ட பெண்..மீட்டு கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடலில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை சிப்பி அரிக்கும் தொழிலாளர்களும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் இணைந்து கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்..

Jun 24, 2024 - 15:56
திருச்செந்தூர் கடலில் தொலைந்த 5 சவரன் சங்கிலி.. கண்ணீர் விட்ட பெண்..மீட்டு கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணியம் சுவாமி கோயிலில் தினமும் பல்லாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினம் தினம் திருவிழா கோலம்தான் திருச்செந்தூரில்.காவடி சுமந்து வரும் பக்தர்கள் எழுப்பும் அரோகரா முழக்கம் கடல் அலைகளை தாண்டி எதிரொலிக்கும். ஆவணி, மாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. கடலோரத்தில் இருக்கும் முருகன் ஆலயம் என்பதால் இங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீராடிவிட்டு சாமியை தரிசனம் செய்வார்கள். 

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி மற்றும் உடன்பிறந்த தங்கையான வாசுகி ஆகியோர் குடும்பத்துடன் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடலில் புனித நீராடியுள்ளனர். அப்போது வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் விழுந்து கடற்கரை மணலில் புதைந்து போனது.

இதனால் பதறிப்போன ஜோதி தனது கணவர் உதவியுடன் உடனடியாக திருச்செந்தூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தனது சங்கிலி மீண்டும் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கடற்கரையில் காத்துக்கொண்டிருந்தார். 

 தங்கச்சங்கிலி தொலைந்து இடத்துக்கு 50க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழுவினர் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து தங்கச்சங்கிலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரை மணலில் கைகளை வைத்து சலிப்பில்லாமல் சல்லடையாக சலித்தனர்.சுமார் 5மணி நேர போராட்டத்துக்கு பிறகு தொலைந்து போன தங்கச்சங்கிலி மீட்கப்பட்டது.

இதனையடுத்து அந்த தங்கச்சங்கிலியை கடலோர பாதுகாப்பு குழுவினர் திருச்செந்தூர் புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் புகார் அளித்த ஜோதி குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்து தொலைந்து போன தங்கச்சங்கிலியை ஒப்படைத்தனர். தங்கச்சங்கிலியை நீண்ட நேரம் போராடி மீட்டு கொடுத்த கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனது சங்கிலியை மீட்டு கொடுத்த அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார் ஜோதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow