IPL தொடரில் மும்பை அணிக்கு விளையாட போனதால் ஒரு வருட தடை- மன்னிப்பு கேட்ட கோர்பின் போஷ்

தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் கோர்பின் போஷ், பாகிஸ்தான் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Apr 12, 2025 - 13:01
IPL தொடரில் மும்பை அணிக்கு விளையாட போனதால் ஒரு வருட தடை- மன்னிப்பு கேட்ட கோர்பின் போஷ்
corbin bosch: one-year ban in psl series

தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் கோர்பின் போஷூக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஒப்பந்த விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில்  கோர்பின் போஷ் பங்கேற்க ஒரு வருடத்திற்கு தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்கா நாட்டினைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கோர்பின் போஷினை மாற்று வீரராக தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ். இதில் என்ன சிக்கல் இருக்கு என்று தோணலாம்? ஆனா இருக்குதே..

ஐபிஎல் போட்டிக்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும் டி-20 பிரிமீயர் தொடர்களை நடத்த முன்வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மட்டுமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே ஆதரவாக இருந்து வருகிறது.

முன்னதாக கோர்பின் போஷ் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் சல்மிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததும், பாகிஸ்தானுக்கு டாடா சொல்லிவிட்டு சிட்டாக மும்பைக்கு பறந்து விட்டார் கோர்பின் போஷ். PSL தொடர் ஏப்ரல் 11 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே 25 வரை நடைபெற உள்ளது. இரண்டு தொடர்களும் ஒரே காலக்கட்டத்தில் நடப்பது இதுவே முதல்முறையும் கூட. ஐபிஎல் போட்டிகளில் கிடைக்கும் வருமானமும், புகழ் வெளிச்சமும் PSL தொடரில் விளையாடுவதால் கிடைக்காது என்பது ஊரார் அறிந்ததே. போஷூக்கும் இது தெரிந்திருக்கும் அல்லவா? அதான் பறந்துவிட்டார்.

நோட்டீஸால் வந்த சிக்கல்:

PCB (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) கோர்பின் போஷ் ஐபிஎல் தொடருக்கு செல்ல முடிவெடுத்தது தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் (ஏப்ரல் 10) கோர்பின் போஷ், பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க ஒரு வருடம் தடை விதிப்பதாக PCB அறிவித்துள்ளது.

தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் கோர்பின் போஷ். “பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து விலகும் எனது முடிவுக்கு மிகவும் வருந்துகிறேன். பாகிஸ்தான் மக்கள், பெஷாவர் அணியின் ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது செயலுக்கு முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அபராதம் மற்றும் PSL தொடரில் பங்கேற்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்ட உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். எதிர்க்காலத்தில் PSL தொடரில் பங்கேற்று விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்து உள்ளார்.

இந்த சீசனுக்காக, IPL ஏலம் நவம்பர் 2024-ல் நடைபெற்றது. PSL டிராப்ட் ஜனவரி 2025-ல் நடைபெற்றது. IPL ஏலத்தின் போது வாய்ப்புக் கிடைக்காத நிலையில், PSL தொடரில் இணைய விருப்பம் தெரிவித்து இருந்தார் கோர்பின் போஷ். எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு வந்துள்ளதால், அதே கப்பென்று பிடித்துக் கொண்டார். வாய்ப்போடு சிக்கலும் வந்தது தான் கொடூரம்.

Read more: Ashwin: ஐபிஎல் முடியும் வரை CSK குறித்து பேசமாட்டோம்... சர்ச்சைகளால் அஸ்வின் எடுத்த முடிவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow