வரலாற்று சாதனை படைத்த ஆப்கான்... வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி... ஆஸ்திரேலியா அவுட்!

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபாரமாக வென்று அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றது.

Jun 25, 2024 - 11:30
வரலாற்று சாதனை படைத்த ஆப்கான்... வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி... ஆஸ்திரேலியா அவுட்!

கிங்ஸ்டவுன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகின்றது. லீக் போட்டிகளைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை வென்று அரையிறுதி போட்டிக்குத் தகுதிப் பெற்றுவிட்டது. இதனையடுத்து குரூப் 1ல் இருந்து அரையிறுதிக்கு செல்லும் இன்னொரு அணி எது என்பதை முடிவு செய்யும் ஆட்டம் தற்போது நடைபெற்றது. இதில்  ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. 

அதன்படி டாஸ் வென்ற ஆப்கன் அணி கேப்டன் ரஷீத்கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய குர்பாஸ் 55 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய ரஷீத்கான் 10 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் என அதிரடி காட்டினார். இறுதியாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது வங்கதேசம். அந்த அணியின் ஓபனராக களமிறங்கிய லிட்டன் தாஸ் மட்டுமே இறுதிவரை ஆப்கன் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடித்தார். இதனால் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவருடன் மற்ற வங்கதேச வீரர்கள் சரியான பாட்னர்ஷிப் அமைக்காததால், தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆப்கன் அணி கேப்டன் ரஷீத்கான், நவீன்–உல்-ஹக் இருவரும் அபாரமாக பந்துவீசி வங்கதேச வீரர்களை திணறடித்தனர். இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஆப்கன் வீரர் நவீன்–உல்-ஹக் ஆட்ட நாயகனாக தேர்வானார். 

இப்போட்டியின் நடுவே அவ்வப்போது மழை பெய்ததால், போட்டியின் ஓவர் எண்ணிக்கை 19 ஆகவும் குறைக்கப்பட்டது. மேலும் டாக்வொர்த் லூயிஸ் விதியின் படியும் ஆட்டம் வங்கதேசம் போட்டியை வெல்ல வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும், கடைசிவரை நம்பிக்கையுடன் உத்வேகத்துடனும் விளையாடிய ஆப்கன் அணி, த்ரில் வெற்றிப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியா அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. லீக் போட்டிகளில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியையும் பந்தாடியது. இதன் காரணமாக குரூப் 1-ல் இருந்து இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றன. 

இந்திய நேரப்படி, 27ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். அதேநாளில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இன்னொரு போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது இந்தியா. தற்போதைய நிலவரப்படி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ள 4 அணிகளுமே சம பலத்தில் உள்ளன. இதனால் எந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளில் யார் வெற்றிப் பெற்றாலும், அவர்கள் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow