ரோகித் ஷர்மாவை 20 கி.மீ தினமும் ஓட வைப்பேன்- யுவராஜ் சிங் தந்தையின் கமெண்ட் வைரல்
யுவராஜ் சிங்கினைப் போன்று மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களையும் என் குழந்தைகளாக தான் பார்க்கிறேன் என யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங்குக்கு தனி அறிமுகம் தேவையில்லை. தோனியினால் தான் யுவராஜ் சிங் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் புறக்கணிப்பட்டார் என யோகராஜ் சிங் கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
இந்நிலையில் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடிய பஞ்சாபினை சேர்ந்த தர்வாரு கோலியின் ’Find a way' பாட்காஸ்ட் நிகழ்வில் பங்கேற்ற யுவராஜின் தந்தை யோகராஜ் தற்போதைய இந்திய அணி குறித்தும், கோலி, ரோகித் போன்ற முன்னணி வீரர்கள் குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நெறியாளர் நீங்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என எழுப்பிய கேள்விக்கு யோகராஜ் அளித்த பதில்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ரோகித் ஷர்மாவை 20 கி.மீ ஓட வைப்பேன்:
யோகராஜ் சிங் கூறுகையில், ”இந்திய அணி குறுகிய கால போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் (ஓடிஐ மற்றும் டி20) டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. நான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், பல வருடங்களுக்கு யாராலும் வீழ்த்த முடியாத அணியாக இந்திய அணியினை மாற்றுவேன்.
எப்போதும் ரோகித், கோலியின் ஓய்வு குறித்து விவாதித்துக் கொண்டே இருக்கிறோம். நான் பயிற்சியாளராக இருப்பின் அவர்களை தக்க வைக்க என் முழு ஆதரவையும் வழங்குவேன். அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வைரங்கள். ஐசிசி போட்டிகள் தவிர்த்து ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் ரோகித், கோலி தொடர்ந்து பங்கேற்பதை உறுதி செய்வேன். இல்லையெனில், ரோகித் சர்மாவை 20 கி.மீ தினமும் ஓட வைப்பேன். நான் மற்ற வீரர்களையும், யுவராஜைப் போல் என் குழந்தையாக தான் பார்க்கிறேன். அவர்களின் செயல்களை ஊக்குவிப்பதில் உறுதுணையாக எப்போதும் இருப்பேன்” என பதிலளித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தடுமாறும் இந்திய அணி:
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் யோகராஜ் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறும் வாய்ப்பினை இழந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






