கடைசி பந்தில் சிக்ஸர்; மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் - யார் இந்த சஜீவன் சஜனா?

Feb 24, 2024 - 16:46
Feb 25, 2024 - 09:45
கடைசி பந்தில் சிக்ஸர்; மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் - யார் இந்த சஜீவன் சஜனா?

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிபெற வைத்ததன் மூலம்,  மகளிர் ஐபிஎல் போட்டியை கோலாகலமாகத் தொடங்கி வைத்திருக்கிறார் சஜீவன் சஜனா.

பெங்களூரில் தொடங்கிய முதல் WPL ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மெக் லேனிங் தலைமையிலான டெல்லி அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (55), யஸ்திகா பாட்டியா இருவரைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,  ஆலிஸ் கேப்சி பந்தில் சிக்ஸர் அடித்து பரபரப்பான ஆட்டத்தை முடித்துவைத்தார் ஆல்ரவுண்டர் சஜீவன் சஜனா.

ஒரே நாளில், உச்சத்துக்கு வந்துள்ள சஜீவன் சஜனா அவ்வளவு எளிதாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. 29 வயதான சஜனாவை, முதல் WPL சீசன் ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. கேரள மாநிலம் வயநாட்டில் பிறந்த சஜனா, குருச்சியா பழங்குடி பிரிவை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு ரிக்‌ஷா ஓட்டுனர். கேரள அணி, தென் மண்டலம், இந்தியா ஏ அணிகளுக்கு விளையாடி கவனம் ஈர்த்த ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டரான இவரை இந்த ஆண்டு WPL ஏலத்தில் மும்பை அணி ரூ. 15 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது.

  

கேரள வெள்ளத்தின் போது தனது வீட்டின் உடமைகளை இழந்த சஜனா, மன உறுதியுடன் போராடி மகளிர் கிரிக்கெட் உலகில் தனக்காக இடத்தைப் பிடித்துள்ளார். மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் என்று சஜனாவை மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீட் கவுர் புகழாரம் சூட்டுகிறார். சஜீவன் சஜனாவின் வெற்றி கதை, அனைத்து மகளிருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

மேலும் படிக்க : அண்ணன் வழியில் தம்பி - காலிறுதியில் சாதனை படைத்த முஷீர் கான்..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow