பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் எப்போது?

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2 முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று அறிவித்துள்ளது.

May 11, 2024 - 14:55
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் எப்போது?

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை 9.08 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தநிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மொத்தம் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.55 சதவிகிதம் ஆகும்.

இந்தநிலையில், பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2 முதல் 8 வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 2 - தமிழ், ஜூலை 3 -ஆங்கிலம், ஜூலை 4 - கணிதம், ஜூலை 5 - அறிவியல், ஜூலை 7 - விருப்பப் பாடம், ஜூலை 8 - சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் ரூ.500 சிறப்பு கட்டணம் செலுத்தி, ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.  பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், கல்வி  மாவட்ட வாரியாக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்காக ரூ.195  கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மே 15 முதல் விடைத்தாள் நகல் பெறலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீடு கோரும்‌ மாணவர்கள்‌ முதலில்‌ விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பித்து பெற்ற விடைத்தாள்‌ நகலை மாணவர்கள்‌ ஆய்வு செய்து, பின்னர்‌ இத்துறையால்‌ அறிவிக்கப்படும்‌ நாட்களில்‌ மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்‌.

விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 15.05.2024 ( புதன்கிழமை) காலை 11.00 மணி முதல்‌ 20.05.2024 ( திங்கட்கிழமை) மாலை 5.00 மணி (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்‌. பத்தாம்‌ வகுப்பு scan copy-க்கு விண்ணப்பிப்பவர்கள்‌ மட்டுமே மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow