போதை ஊசி போட்ட நொடியில் சுருண்டு விழுந்து பலியான இளைஞர்.. சென்னையில் மூவரை கைது செய்த போலீஸ்

பல போதைப்பொருள் விற்பானையாளர்கள் போலீசிடம் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 11, 2024 - 15:01
போதை ஊசி போட்ட நொடியில் சுருண்டு விழுந்து பலியான இளைஞர்.. சென்னையில் மூவரை கைது செய்த போலீஸ்

சென்னையில் தனக்கு தானே போதை ஊசியை செலுத்திக்கொண்ட நபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த  சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்துள்ளனர். 

சென்னை, எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணன், வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதைக்கு அடிமையாகி ஊர்ச்சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சர்மா நகர் எஸ்டேட் பகுதியில் போதை மாத்திரையை ஊசியில் கலந்து கையில் சத்யா ஏற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்ட சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். இது தொடர்பாக சத்யாவின் நண்பர் உசேன் பாஷா என்பவர் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அங்கு வந்த சத்யாவின் அண்ணன், சோதனை செய்து பார்த்தபோது சத்யா மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். தகவலறிந்து மருத்துவர்களுடன் வந்த எம்.கே.பி நகர் போலீசார், சோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. அவரின் உடலை மீட்ட போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

இந்தச் சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யநாராயணனுக்கு போதை மருந்து விற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது மஜீத், வியாசர்பாடி அசேன் பாஷா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் பின்புறம் உள்ள பகுதியில் அண்டா என்ற ராஜேந்திரன் என்பவரிடமிருந்து முகமது மஜீத் ஒரு மாத்திரை 200 ரூபாய்க்கு வாங்கி அதை கொடுங்கையூர், எம்.கே.பி நகர் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு 50ரூபாய் லாபத்தில் விற்றது தெரிய வந்தது. 

அதன் தொடர்ச்சியாக சக்திவேல் என்பவர் மஜீத்திடம் வாங்கி, அவர் ஒரு 50ரூபாய் லாபம் வைத்து 300 ரூபாய்க்கு  போதை மாத்திரைகளை விற்று வந்தது அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அடுத்ததாக அவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் மரண வழக்கு விசாரணையில் பல போதைப்பொருள் விற்பானையாளர்கள் போலீசிடம் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக ஏற்கனவே எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow