வெஸ்ட் நைல் வைரஸ்.. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்
கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைகளில் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ரஷ்ய அறிவியல் - கலாசார மையம் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் கல்வி ஆலோசகர்கள் சார்பில் ரஷ்ய கல்வி கண்காட்சி நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கல்வி கண்காட்சியில் இந்தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரக அதிகாரி ஒலெக் அவ்தேவ், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ், பயோடெக்னாலஜி துறை தேசிய ஆராய்ச்சி அணு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எலெனா சரபுல்ட்சேவா, பொது நோயியல் துறை மற்றும் மருத்துவ சொற்களஞ்சியத்தின் இணை பேராசிரியர் திமூர் அக்மெடோவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எதையும் ஆய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். இருப்பினும் குளறுபடிகளுக்கு ஒரே தீர்வு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதுதான். அதற்கான வாய்ப்பு ஆட்சி மாற்றம் தான். ஆட்சி மாற்றம் நிகழும் போது எல்லாம் நன்றாகவே நடக்கும்” எனக் கூறினார்.
மேலும், கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று நோய் தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பொது சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைகளில் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்” தெரிவித்தார்.
What's Your Reaction?