சின்னப்பிள்ளை அம்மாவுக்கு வீடு... வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் - அண்ணாமலை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலில் விழுந்த மூதாட்டி சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசின் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்ட முதலமைச்சர் புறப்பட்டுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கடந்த 2001-ல் தமிழகத்தை சேர்ந்த மூதாட்டி சின்னப்பிள்ளைக்கு டெல்லியில் ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சின்னப்பிள்ளை காலில் விழுந்து வணங்கினார். இந்த மூதாட்டிக்கு மத்திய அரசின் "அனைவருக்கும் வீடு" கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து பட்டா கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அதிகாரிகள் தனக்கு வீடு கட்டித்தரவில்லை என்று அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது வேதனைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மாவுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது திமுக அரசின் தவறு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்ய முதலமைச்சர் கிளம்பியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருப்பதாகவும், அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது என அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்ட முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?