கள்ளச்சாராயம் புழங்குவதை அப்போதே சுட்டிக்காட்டிய எம்.எல்.ஏ. - கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு
கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவை பெருமளவில் புழக்கத்தில் உள்ளதால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் புழக்கம் இருப்பதை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்தாண்டே அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, பேரவைத் தலைவருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள கூத்தக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர். இவரது மகன் ஜெகன் கடலூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து ஜெகனை காணவில்லை என வரஞ்சரம் காவல் நிலையத்தில் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெகன்ஸ்ரீ-யின் தொலைபேசி எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரது நண்பர்களான ஐயப்பன் உட்பட நான்கு பேரின் தொலைபேசி எண்ணும் இருந்துள்ளது. இதனால் ஐயப்பன் உட்பட நான்கு பேர் மீது சந்தேகமடைந்த வரஞ்சரம் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஐயப்பன் என்பவருக்கும் ஜெகன்ஸ்ரீ-க்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதற்காக ஐயப்பன் உட்பட நான்கு பேரும் ஜெகன் ஸ்ரீ-யை அழைத்து கொண்டு கூத்தக்குடி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஜெகன்ஸ்ரீ-க்கு மது போதை அதிகமான நிலையில் ஐயப்பன் உட்பட நான்கு பேரும் சேர்ந்து ஜெகன் ஸ்ரீ-யை பாட்டிலால் குத்தி கொலைசெய்து வனப்பகுதியிலேயே புதைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் புழக்கம் இருப்பதை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்தாண்டே அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேரவைத் தலைவருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
செந்தில்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் கூத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் அவர்களின் மகன் ஜெகன்ஸ்ரீ என்பவர் 25.03.2023 அன்று காலை 8.00 மணியளவில் வரஞ்சரம் காவல் நிலையத்தில் தனது மகன் காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்த நிலையில், கூத்தக்குடி கிராமத்தை மூன்று நபர்களை பிடித்து வந்து விசாரித்து மது அருந்த அழைத்து சென்று, மது பாட்டிலால் தலையில் தாக்கி, கழுத்தில் குத்தி, கூத்தக்குடியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்து விட்டனர்.
எனவே இப்பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவை பெருமளவில் புழக்கத்தில் உள்ளதால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும், அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேரவை தலைவருக்கு எழுதிய கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது.
What's Your Reaction?