மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1 சதவிகித உள் ஒதுக்கீடு பற்றி பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க கூறி, விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Jan 10, 2024 - 13:30
Jan 10, 2024 - 18:41
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1 சதவிகித உள் ஒதுக்கீடு பற்றி  பரிசீலிக்க அரசுக்கு  உத்தரவு

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதிப்பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (ஜனவரி 09) மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC) மூன்றாம் பாலினத்தவர்களை சேர்த்துள்ளதாகவும், இதனால் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர், அந்த சலுகையை இழக்க வேண்டியுள்ளதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்த பின் இதுவரை அந்த ஒதுக்கீட்டில் 1 மூன்றாம் பாலினத்தவர் கூட இட ஒதுக்கீடு சலுகையை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், கர்நாடகாவில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின என அனைத்து பிரிவிலும் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.இதையடுத்து, தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவுகளிலும் 1 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறிய  நீதிபதிகள், இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க கூறி, விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow