Manjummal Boys: “குடிப் பொறுக்கிகளின் கூத்தாட்டம்..” மஞ்ஞும்மல் பாய்ஸுடன் மல்லுக்கட்டும் ஜெயமோகன்
மலையாளத்தில் உருவான மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழக ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் இயக்கிய மஞ்ஞும்மல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸின், காலித் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் குணா குகையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. முக்கியமாக குணா படத்தின் கண்மணி அன்போடு பாடல் தான் மஞ்ஞும்மல் பாய்ஸ் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ள மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை தமிழக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், எழுத்தாளர் ஜெயமோகனோ மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மஞ்ஞும்மல் பாய்ஸை குடிப் பொறுக்கிகளின் கூத்தாட்டம் என ஒரே வார்த்தையில் பங்கம் செய்துள்ள ஜெயமோகன், மலையாளிகள் பற்றியும் காட்டமாக விமர்சித்துள்ளார். யானை டாக்டர் எழுதியவன் என்ற முறையில் தற்போது மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை விமர்சித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி, ஆனால் மல்லுவுட் படம் என்றால் அது ரியாலிசம் என்பார்கள் என நம்மூர் அரைவேக்காடுகள் என கோலிவுட் ரசிகர்களையும் கொத்து பரோட்டா போட்டுள்ளார்.
மேலும், “மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது. குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்து கொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள்.”
“இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. ஆனால் அவர்கள் மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற தெனாவட்டு இருக்கும். இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன். வணிக சினிமா என்பது கலையொன்றும் அல்ல. அது எந்த வகையான அறிவுப் பயிற்சியும் கலையறிமுகமும் இல்லாத மாபெரும் மக்கள் திரளை நோக்கி நேரடியாகப் பேசுகிறது. அதற்கு கலைக்குரிய சுதந்திரம் அளிக்கப்படவே கூடாது. அறிவார்ந்த எதிர்ப்பை அளிக்கமுடியாத எளிய மக்கள் திரளை அந்த கட்டின்மை சீரழித்துவிடும். இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
ஜெயமோகனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் பற்றி எதுவும் சொல்லாமல் மலையாளிகளையும் தமிழ் ரசிகர்களையும் எப்படி தரக்குறைவாக விமர்சிக்கலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஜெயமோகனின் வாசகர்கள் பதிலடி கொடுக்க சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ்.
What's Your Reaction?