கொடைக்கானல்.. நீலகிரிக்கு டூர் போறீங்களா? இ-பாஸ் பெறுவது எப்படி?.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு அருணா இ ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி நபர்களுக்கு இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.
கோடை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். மேலும் கோடை வெயில் இருந்து தப்பிக்க மலை பிரதேசமான ஊட்டிக்கு மக்கள் குவிகின்றனர்.
உதகையில் கோடை விழா வரும் 10ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. இந்த மலர் கண்காட்சி 10ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க, பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரும் மே 7ம் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று ( மே 7) முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் பதிவு செய்வதற்கான இணையதளம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் இருந்தால் போதுமானது. அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. இந்த நடைமுறையானது மே 7 முதல் 30ம் தேதி வரை சோதனை முறையில் அமலில் இருக்கும்.
வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து நீலகிரி வரும் மக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்தும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது இமெயில் முகவரியை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் நேற்று முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிமாநிலம் /வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று (07 /05/ 2024) அன்று முதல் 30/ 06 / 2024 வரை இ- பாஸ் பதிவு செய்து வர வேண்டும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பூங்கொடி அறிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இமெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும். இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும்.
இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?