TVK Vijay: விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்... சிறுவன் கையில் தீ... வினையாகிப் போன சாகசம்!

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் கையில் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jun 22, 2024 - 12:53
TVK Vijay: விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்... சிறுவன் கையில் தீ... வினையாகிப் போன சாகசம்!

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் விஜய், விரைவில் அரசியலிலும் களமிறங்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலில் போட்டியிட போவதாக விஜய்யே அறிவித்துவிட்டார். ஏற்கனவே தனது பெயரில் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி, அதன் மூலம் பல உதவிகள் செய்து வந்தார். தற்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல அதிரடி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார் விஜய்.

இரு தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார் விஜய். அதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களிடமும் நலம் விசாரித்தார். அதனையடுத்து தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட விஜய், கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜய்யின் பிறந்தநாளை தவிர்த்துவிட்டு கள்ளக்குறிச்சிக்கு விரைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அவர்களோ சிறுவனின் கையில் தீ வைத்து விபரீத சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னை நீலாங்கரையில் தவெக நிர்வாகிகள் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அப்போது சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து சாகசம் செய்ய முயற்சித்தனர். ஆனால், அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய் இருந்ததால், சிறுவனின் கையில் தீ வேகமாக பரவியது. கையில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அங்குமிங்கும் ஓடியுள்ளார். அப்போது அந்தச் சிறுவனை மீட்க முயன்ற சிலர் மீதும் தீ பற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக சிறுவனின் கையில் பற்றி எரிந்த தீயை அணைத்து, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சிறுவன் கையில் தீ எரிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய்க்கும் தவெக நிர்வாகிகளுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசின் நிர்வாகம் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார் விஜய். ஆனால், அவரது கட்சி நிர்வாகிகள், சாகசம் என்ற பெயரில் சிறுவனின் கையில் தீ வைத்து பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா என விமர்சித்து வருகின்றனர். மேலும், இதற்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார், இவரது அரசியல் லாபத்துக்கு சிறுவர்களின் வாழ்வில் விளையாடலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow