2 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு.. சட்டசபைக்குள் நுழைந்த உடன் விண்ணை எட்டிய கோஷம்

என்னை அவமானப்படுத்திய சட்டசபைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன் என்று சபதமிட்ட சந்திரபாபு நாயுடு அந்த சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.

Jun 22, 2024 - 12:14
2 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு.. சட்டசபைக்குள் நுழைந்த உடன் விண்ணை எட்டிய கோஷம்

அமராவதி : ஜெகன்மோகன் ஆட்சியில் அவமானப்படுத்திய சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு சட்டசபைக்கு சென்றார். தொடர்ந்து முதல்வர் உட்பட வெற்றிபெற்ற அனைவரும் எல்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.

ஆந்திர மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், 175 பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் 164 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், முதன் முறையாக 2 நாள் நடைபெறும் பேரவைகூட்டம் நேற்று கூடியது. இதில் தற்காலிக சபாநாயகராக கோரண்ட்ல புச்சைய்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர்பாலகிருஷ்ணா உட்பட அனைவருக்கும் எம்.எல்.ஏக்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், சந்திரபாபு நாயுடுவை பேரவையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மிகவும் அவமானப்படுத்தினர்.

சந்திரபாபு நாயுடுவின் மனைவிகுறித்து கீழ் தரமாக விமர்சித்தனர். இதனால் வேதனை அடைந்த சந்திரபாபு நாயுடு, “இந்தசபையில் இனி கால் பதிக்க மாட்டேன். அப்படியே வர நேர்ந்தால் மீண்டும் முதல்வராகத்தான் கால் பதிப்பேன்” என சபதமிட்டு வெளியேறினார்.


சரியாக 30 மாதங்கள் கடந்தது. தற்போது சந்திரபாபு நாயுடு போட்ட சபதத்தின் படியே மீண்டும்தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிஅமைத்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் வெறும் 11 இடங்களிலேயே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தனர். ஆதலால்,நேற்று பேரவைக்கு வரும் போது, சந்திரபாபு, பேரவை வாசலில் தேங்காய் உடைத்து விட்டுதான் உள்ளே காலடி எடுத்து வைத்தார்.

இன்று 11 மணிக்கு சபாநாயகர் தேர்வு நடைபெறும். அதில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகி அய்யண்ண பாத்ருடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். நேற்று மொத்தம் 172 எம்.எல்.ஏக்கள் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். மீதமுள்ள 3 பேர் இன்று சனிக்கிழமை பதவி பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.

கடந்த 2021 ஆண்டு நவம்பர் 21ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை ஏளனமாக பேசி கிண்டல் செய்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அம்பதி ராம்பாபு, பேசுகையில், “எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து, சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து சில அவதூறான, நாகரிகமற்ற கருத்துகளைத் தெரிவித்தார்.


தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவர் முன்வந்து கூச்சலிட்டு, அம்பதி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசும்போது மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்தார்.என்னுடைய 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்று நான் வருத்தப்பட்டதும் இல்லை. நான் பல போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். சட்டப்பேரவையில் காரசாரமான வாதங்களில் பங்கேற்றிருக்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் பலமுறை விவாதங்களில் பேசியிருக்கிறேன். இதுபோன்று எதிர்க்கட்சிகள் தரக்குறைவாக நடந்ததை நான் இதுவரை பார்த்தது இல்லை. மகாபாரத்தில் கவுரவர்கள் நடத்திய சபையைப் போன்று இருக்கிறது. பாஞ்சாலியின் துகிலை துரியோதனன் எடுத்தபோது, பாண்டவர்களை அவமதித்ததைப் போன்று உணர்கிறேன். ஆனால், இவை அனைத்தையும் பார்த்து சபாநாயகர் மவுனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது என்று கூறினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் தவறான வார்த்தைகளால் எனது மனைவியைப் பேசுகிறார்கள். அதற்கு பதில் அளித்துப் பேச எனக்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை, பேசவிடவில்லை. இதுபோன்ற அவையில் இனிமேல் நான் பங்கேற்கமாட்டேன். என் உரிமைக்காகப் போராடுவேன். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை அவமானப்படுத்தினீர்கள். என் சுயமரியாதையை அடமானம் வைத்து நான் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன். மக்களிடம் சென்று போராடி, நான் அவர்களின் ஆதரவைப் பெறுகிறேன். மக்களின் தீர்ப்பால் மீண்டும் நான் முதல்வராக வருவேன். அப்போது இந்த அவைக்குள் வருகிறேன். அதுவரை இந்த அவைக்குள் வரமாட்டேன் என்று சபதம் செய்தார் சந்திரபாபு நாயுடு. 

அவர் சொன்னது போலாவே சபதத்மதை நிறைவேற்றியுள்ளார் சந்திரபாபு நாயுடு. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்று சட்டசபைக்குள் நுழைந்தார் சந்திரபாபு நாயுடு.  அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் நிஜம் வென்றது, ஜனநாயகம் வென்றது என கோஷமிட்டு சந்திரபாபுவை வரவேற்றனர். இதனையடுத்து பவன்கல்யாண் முதல்வர் சந்திரபாபுவை கட்டித் தழுவி வரவேற்றார்.ஏற்கனவே சந்திரபாபு சபதம் எடுத்த வீடியோவும் தற்போது சட்டசபையில் முழுபலத்துடன் எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக செல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதனிடையே சட்டசபை தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ள முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று எம்.எல்.ஏவாக பதவியேற்க பேரவையின் பின்வாசல் வழியாக காரில் வந்தார். பின்னர் அவர் துணை சபாநாயகர் அறையில் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் காத்திருந்தார். தற்காலிக சபாநாயகர், ஜெகனின் பெயரை குறிப்பிட்டு அழைக்கையில் அப்போது, அவைக்குள் வந்து, எம்.எல்.ஏவாக பதவி பிரமாணம் செய்தார். பின்னர், அங்கிருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் பேரவையில் இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தியவாறு, தற்காலிக சபாநாயகரிடம் சென்று வணக்கம் தெரிவித்து விட்டு அங்கிருந்து நேராக காரில் ஏறி வீட்டிற்கு சென்று விட்டார் ஜெகன்மோகன் ரெட்டி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow