'சர்வாதிகாரி இந்திரா காந்தி'... ஆவேசமாக பேசிய ஓம் பிர்லா... கொந்தளித்த எதிர்க்கட்சிகள்... குலுங்கிய மக்களவை!

1975ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் போடப்பட்ட எமர்ஜென்சியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சபாநாயகர் கேட்டுக் கொண்டதன்பேரில் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

Jun 26, 2024 - 16:00
'சர்வாதிகாரி இந்திரா காந்தி'... ஆவேசமாக பேசிய ஓம் பிர்லா... கொந்தளித்த எதிர்க்கட்சிகள்... குலுங்கிய மக்களவை!
ஓம் பிர்லா

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பதவியேற்றவுடன் எமர்ஜென்சி குறித்தும், இந்திரா காந்திக்கு எதிராகவும் பேசியதால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.  காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி 233 இடங்களை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. 

மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை நேற்று முன்தினம் கூடியது. இதில் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக இன்று தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். 

முன்னதாக இந்திய வரலாற்றில் அரிதாக மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. பாஜக கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். 

இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து ஓம் பிர்லாவை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ''உறுப்பினர்கள் அனைவருக்கும் மக்களவையில் மக்களின் குரலை எதிரொலிக்க வாய்ப்பு வழங்கப்படும். மக்களவையில் உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக் கூடாது. சாலையில் போராட்டம் நடத்துவதற்கும், மக்களவையில் போராட்டம் நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

இதன்பிறகு கடந்த 1975ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் போடப்பட்ட எமர்ஜென்சியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சபாநாயகர் கேட்டுக் கொண்டதன்பேரில் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ''சர்வாதிகார காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  எமர்ஜென்சியால் ஏராளமான இந்திய குடிமக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மேலும் பலர் உயிரை இழந்தனர்.  1975ம் ஆண்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட எமர்ஜென்சிக்கு மக்களவை கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அது ஒரு கறுப்பு தினம். 

எமர்ஜென்சிக்கு எதிராக போராடி இந்திய ஜனநாயகத்தை காத்த தியாகிகளுக்கு மக்களவை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களும், ஆக்கப்பூர்வமான வாதங்களும் என்றென்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் சர்வாதிகாரி இந்திரா காந்தி, எமர்ஜென்சியை கொண்டு வந்து ஜனநாயக விழுமியங்களை நசுக்கி, கருத்துசுதந்திரத்தின் கழுத்தை நெறித்துள்ளார்'' என்று குற்றம்சாட்டினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை சொல்லி ஓம்பிர்லா குற்றம்சாட்டியபோது, மக்களவையில் இருந்த இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையை பலமாக தட்டி சபாநாயகருக்கு  எதிராக கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு மக்களவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow