Dhanush: விவாகரத்துக்கு ரெடியான தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி… குடும்பநல நீதிமன்றத்தில் மனு!
காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷும் ஐஸ்வர்யா ரஜினியும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.
                                சென்னை: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். திரையுலகில் அறிமுகமான அதே வேகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்படி 2004ம் ஆண்டு திருமணம் ஆன தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் இந்த முடிவு திரையுலகையே அதிர வைத்தது. இதனையடுத்து ரஜினியின் தரப்பில் இருந்து தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல் தனுஷ் குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவிடம் பேசி வந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தனித் தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கினர். ரஜினி வசித்து வரும் போயஸ் கார்டன் பகுதியிலேயே தனுஷ் பிரம்மாண்டமான பங்களா கட்டி குடியேறிவிட்டார்.
தனுஷின் புதிய வீடு நிகழ்ச்சியில் கூட ஐஸ்வர்யா கலந்துகொள்ளவில்லை. அப்போதே இருவரும் இனி சேர வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின. அதேநேரம் தங்களது மகன்களுக்காக மட்டும் அவர்களது பள்ளி விழாக்களில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். அதேபோல், தனுஷின் பட விழாக்களில் அவரது மகன்கள் கலந்துகொள்வதும் வழக்கமான ஒன்றாக பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் பரஸ்பர விவாகரத்து வேண்டி தனுஷும் ஐஸ்வர்யாவும் குடும்பநல நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர். 
அதில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இருவருமே மனம் ஒத்து விவாகரத்து கோரியுள்ளதால், இவர்களது மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதற்கான காரணங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            