புதிய முப்படை தலைமை தளபதியாக தமிழர் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலாக தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணியை இந்தியாவின் அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “ ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை இந்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சௌகான், 2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். அதைதொடர்ந்து புதிய முப்படை தலைமை தளபதி பதவியேற்க உள்ளார்.
டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்ற ராஜா சுப்ரமணி, டெல்லி மற்றும் லண்டனில் பயின்றுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், 1985ம் ஆண்டு டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார். ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கடந்த ஆண்டின் செப்டம்பர் 1ம் தேதி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.
கஜகஸ்தானின் அஸ்தானாவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். கர்னல் பதவியில், ராணுவத் தலைமையகத்தில் இருக்கும் எம்எஸ் கிளையில் உதவி ராணுவச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் துறையின் துணைத் தளபதியாகவும், ஜிஓசி-யின் சென்ட்ரல் கமாண்டராகவும் பணிபுரிந்துள்ளார்.
பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் காலாட்படையை வழிநடத்தியுள்ளார். வடகிழக்கு இந்தியாவில் 'ப்ளாக் கேட்ஸ்' பிரிவை மேற்பார்வையிட்ட இவர், 2020-ல் உத்தர பாரத் பகுதிக்கும் அம்பாலாவில் உள்ள முக்கிய கார்கா கார்ப்ஸுக்கும் தலைமை தாங்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் என்.எஸ் ராஜா சுப்ரமணிக்கு விஷிஷ்ட் சேவா பதக்கமும், 2020 ஆம் ஆண்டில் இவருக்கு அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது. இதுபோக சேனா பதக்கத்தையும், பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தையும் அவர் பெற்றுள்ளார்.
மும்பையில் மேற்கு கடற்படை பிரிவு தளபதியாக இருக்கும் துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், வரும் மே 31ம் தேதி அன்று அடுத்த கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2028 வரை தொடரும் என தெரிகிறது.
What's Your Reaction?