கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு: "அப்பா என்று ஒரு நண்பன்!"
கவியரசர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன், தனது தந்தையின் அளவற்ற பாசம், குடும்ப வாழ்க்கை மற்றும் மறக்க முடியாத நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அப்பாவிற்கு இலக்கண வரம்புகள் இருக்கிறதா? எந்த இலக்கண விதிகளுக்குள்ளும் அடங்காதவர் என் தந்தை கவியரசர் கண்ணதாசன். அவரைப் பொறுத்த வரையில் வெளியிலே அவர் யாராக இருந்தாலும், வீட்டுக்குள்ளே வருகிறபோது ஓர் அழகான, அன்பான அப்பாவாகத்தான் நான் பார்த்திருக்கிறேன்
அவரோடு பழகிய காலங்கள் எல்லாம் ஒரு காவியமாக என் உள்ளே பதிந்துவிட்டன. பிள்ளைகளான எங்கள் மீது அவர் வைத்திருந்த பாசம் அளவிட முடியாதது. எங்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் இருந்தால், எங்களைவிட அதிகமாகத் துடித்தவர் அவர்.
அப்பாவிற்கு அம்மா மதிய உணவு பரிமாறிக்கொண்டிருக்கிறபோது, அவருடைய தட்டை எட்டிப் பார்த்து 'அது என்ன அப்பா?' என்று கேட்பேன். காரணம், அவருக்குத் தினமும் இரண்டு அசைவ உணவுகளை என் தாயார் (பார்வதி) செய்துவைத்திருப்பார். அதிலே ஓர் அசைவ உணவு எங்களுக்கும் இருக்கும். மற்றொன்று என்ன என்று கேட்டதும், அப்பா அதைக் கையில் எடுத்து என் வாயில் ஊட்டிவிடுவார். நான் இளைஞனாக இருந்தபோது மட்டுமல்ல, எனக்குத் திருமணம் ஆனபிறகும்கூட, இது நிகழ்ந்தது. அப்படி ஒரு பாசமான தந்தை.
என்னை அவர் திரைப்பட இயக்குநராக ஆக்க வேண்டும் என்று கருதியிருந்தார். ஆகவே, திரைப்படக் கல்லூரியில் நான் படிப்பதற்கு இடம் வாங்கிக் கொடுத்தார். ஆனால், நான் வழக்கறிஞராக வேண்டும் என்று சொன்னபோது, அதற்கேற்றாற்போல் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு இடம் வாங்கிக் கொடுத்தார். சட்டம் பயின்ற பின்னர் என்னை வழக்கறிஞர் பஞ்சாபகேசன் அவர்களிடம் சேர்த்துவிட்டார்.
வழக்கறிஞராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அப்பாமீது மானநஷ்ட வழக்கு ஒன்று திருவாரூரில் பதிவு பெற்றிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை ரத்து செய்ய, சீனியர் திரு. பஞ்சாபகேசன் அவர்கள் என்னிடம் சில வழக்கு சம்பந்தமான பேப்பர்களைக் கொடுத்து, அப்பாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வரும்படி சொல்லியிருந்தார்.
கவிதா ஓட்டலில் இருந்த அப்பாவைச் சந்திக்கச் சென்றேன், வழக்கறிஞர் உடையுடன்! அங்கே திரு.கே.பாலசந்தர், திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுடன் சேர்ந்து 'நினைத்தாலே இனிக்கும் படத்திற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் அப்பா.
அப்பாவைப் பார்ப்பதற்கு யார் சென்றாலும், கவிதா ஓட்டலில் ஏறத்தாழ 200 அடி நடந்து, நீங்கள் அந்த மண்டபத்தில் செல்ல வேண்டும். மண்டபத்தின் கடைசியிலே அப்பா அமர்ந்திருப்பார். ஆகவே, நானும் என்னுடைய ஷூவைக் கழற்றிவிட்டு, அங்கே நடந்துபோய் அப்பாவைப் பார்த்தேன். என்னை இயக்குநர் கே.பி. மற்றும் அங்கே இருந்த அனைவரிடமும், 'இவன் என் மகன். வழக்கறிஞராக இருக்கிறான்' என்று அறிமுகப்படுத்தினார்.
அப்பாவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, நான் திரும்பிச் சென்று என் ஷூவை போட்டுக் கொண்டிருந்தபோது, தொலைவில் இருந்து, "காந்தி...” என்று உரத்துக் கூப்பிட்டார் அப்பா. நானும் திரும்பி நடந்து அப்பா அருகில் போனதும், "ஒண்ணும் இல்ல... போயிட்டு வா" என்றார். நான் குழப்பம் அடைந்ததைப் பார்த்த கே.பாலசந்தர் அவர்கள், "அது ஒண்ணும் இல்லய்யா! நீ இந்த வழக்கறிஞர் கோட்டைப் போட்டுக்கொண்டு வருவதையும், போவதையும் உங்க அப்பா ரசித்துப் பார்த்துக்கிட்டிருக்கார்!” என்றார். எப்பேர்ப்பட்ட தருணங்கள் அவை! அப்பா..! அவருடைய பாசத்தைக்கூட வெளிச்சம் போட்டுத்தான் காட்டத் தெரியும். அவருக்கு எதையும் மறைத்துப் பழக்கமே இல்லை.
என்னையும், என் சகோதர சகோதரிகளையும் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்து, ஒழுங்காகப் படிக்க வைத்தது, என் தாயார் பார்வதியம்மா அவர்கள். படிப்பு விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் அவர். ஆனால், அப்பாவிற்கோ பரிட்சையில் பெயில் ஆவது ஒரு பெரிய விஷயமே இல்லை. அழகாக ஆறுதலும் சொல்வார்.
நான் வழக்கறிஞர் ஆனேன். என் சகோதரர் கமல், பல் டாக்டர் ஆனார். ஆகவே, வீட்டு வாசலில் இரண்டு போர்டுகள் இருக்கும். ஒன்றில் காந்தி கண்ணதாசன் பி.ஏ. பி.எல். வழக்கறிஞர் என்றிருக்கும்; இன்னொன்றில், டாக்டர் கமல் பி.டி.எஸ். என்று இருக்கும். காரில் ஏறியவுடன், அப்பா அந்த இரண்டு போர்டுகளையும் ஆசை தீரப் பார்த்துவிட்டுத்தான் கிளம்புவார். ஒருநாள், நான் கோர்ட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, அம்மா ஒரு நமுட்டுப் புன்னகை யோடு சொன்னார்... “உங்களை யெல்லாம் படிக்க வெச்சது நான்! ஆனா, உங்க அப்பா என்னவோ பெருமை பொங்க அந்த போர்டு ரெண்டையும் அப்படிப் பார்த்துட்டுப் போறாரு...!"
எப்போது அப்பா வெளியே கிளம்பினாலும், அவர் கண்களிலிருந்து மறையும் வரை அவரை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பார் அம்மா. இப்படித்தான் எங்களது வீடு என்றும் இருக்கும்.
திருமணத்திற்காகப் பெண் பார்க்க வேண்டும் என்று என் தந்தை சொன்னபோது, நான் ஒப்புக் கொள்ளவில்லை. "ஏன், யாரையாவது பார்த்து வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார். "அப்படி எதுவும் இல்லை. ஆனால், ஒருவேளை அப்படிப் பார்த்து வைத்திருந்து, அவர்கள் எனக்குப் பெண் தர மாட்டேன் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டேன். "வீட்டுப்படி ஏறி, கண்ணதாசன் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தால், மாட்டேன் என்று யாராவது சொல்வார்களா?” என்றார். அவருக்குத் தன் மீதும் தன் பிள்ளைகள் மீதும் இருந்த அழுத்தமான நம்பிக்கை, அந்தப் பதிலில் தெரிந்தது.
1960களில், சீனத்து உணவு வகைகள், நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் போன்றவை சென்னையில் ஓரிடத்தில் மட்டுமே கிடைக்கும். 'சங்கிங் சைனீஸ்' என்கின்ற அந்த சீனத்து உணவு விடுதி மவுன்ட் ரோடு புகாரிக்கு அருகில் இருந்தது. சீனத்து உணவு வகைகள் பணக்காரர்கள் மற்றும் தொழிற்சாலை அதிபர்கள், ஏற்றுமதியாளர்களின் குடும்பங்கள், சினிமாத் துறையைச் சேர்ந்த பெரிய மனிதர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே! மற்றவர்களுக்கு அந்த வகை உணவு ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது. என் தாயார் உட்பட!
அப்பா எங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு போய், அங்கே என்ன சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரும் ரசித்துச் சாப்பிடுவார். சென்னையில் இருந்த புகாரி, பிலால், கஜேந்திர விலாஸ், மோட்டி மஹால், சங்கிங் சைனீஸ் என எல்லா முதன்மையான ஓட்டல்களின் மெனு கார்டுகளும் வீட்டில் இருக்கும். அப்பாவால் வர முடியாத நேரங்களில், தனக்கு வேண்டியதைத் தொலைபேசியில் நேரடியாகச் சொல்லிவிடுவார். நாங்களும் இரவு அங்கே போய்ச் சாப்பிட்டுவிட்டு, அப்பாவுக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு வருவோம்.
இந்த ராஜ வாழ்க்கையை வாழ, எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர் என் தந்தை. அவருக்குள் எவ்வளவு பிரச்னைகள், கவலைகள் இருந்தாலும் அல்லது கடன்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் வீட்டுக்கு வெளியே வைத்துவிடுவார். நாங்கள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவதற்கு யோசிக்கக்கூடமாட்டார். அன்றே அது வந்து சேர்ந்துவிடும். அவருடைய இந்த அன்புப் பழக்கம், என் மகன் கார்த்திக் கண்ணதாசன் வரை தொடர்ந்தது. பேரன் கேட்கிறான் என்று, அவன் கேட்பதை உடனே அவரே சென்று வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
இதுவரை நான் குறிப்பிட்டதெல்லாம் என் தந்தையோடு தினமும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை! இந்த அனுபவங்களே இன்று வரை என்னை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் என் தந்தை சொல்லாமல் சொல்லிக் கொடுத்தது... நேர்மையாக, மற்றவர்களை எந்த வகையிலும் காயப்படுத்தாமல் அல்லது ஏமாற்றாமல் வாழ்கிற போதுதான் அந்த வாழ்க்கை நியாயமான வாழ்க்கையாக மாறுகிறது என்பதைத்தான்!
குமுதம் கவிஞருடைய மனத்தோடு ஒன்றிய வார இதழாகும். அவரைக் குமுதமும் கொண்டாடியது. இதோ, அவரின் நூற்றாண்டிலும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.
இப்போது அப்பா இருந்திருந்தால்..?
'நான் நிரந்தரமானவன் எந்த நிலையிலும் அழிவதில்லை, எனக்கு மரணமில்லை!"
What's Your Reaction?

