பாஜகவில் இணைந்த தமிழிசை.. தமிழ்நாட்டில் போட்டி என அறிவிப்பு..
எந்த தொகுதியில் போட்டி என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், பாஜகவில் இணைந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை அண்ணாமலை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் களத்தில் பாஜகவுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கஷ்டமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதிகாரத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக வந்துள்ள தமிழிசைக்கு, அரசியல் அனுபவத்துடன் நிர்வாகம் அனுபவமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாஜகவில் மட்டும் தான் எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும், அனைத்தையும் விட்டுவிட்டு சாமானியராக மக்கள் பணியாற்ற வருவோம் என அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பாஜகவில் மீண்டும் உறுப்பினராக இணைந்தது மிக மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட்டார். கஷ்டமான முடிவை இஷ்டப்பட்டு எடுத்ததாகவும், பாஜகவின் வெற்றிக்காக அனைவருடனும் இணைந்து பணியாற்றப் போவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டியிடப் போவதாக கூறிய தமிழிசை, எந்த தொகுதி என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார். மேலும், மாநில அரசால் செய்ய முடியாதவற்றை, தாங்கள் வெற்றி பெற்றால் செய்துவிடுவோம் என ஏமாற்று அறிக்கையை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக விமர்சித்தார்.
What's Your Reaction?