திமுக தேர்தல் அறிக்கை : வெட்கமாக இல்லையா? - ஆவேசப்பட்ட அண்ணாமலை...

திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான்.

Mar 20, 2024 - 14:40
திமுக தேர்தல் அறிக்கை : வெட்கமாக இல்லையா? - ஆவேசப்பட்ட அண்ணாமலை...

திமுக தேர்தல் அறிக்கை மூலம், எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று முதலமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 20) திமுக தனது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 

இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "2021 சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே வாக்குறுதிகளை மக்களவை தேர்தலுக்கும் கொடுத்திருப்பதில் இருந்தே, எந்தத் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். 

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்தும், அதுகுறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு தற்போதும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? என  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் மீண்டும்  கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள் எனவும், இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow