தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா... சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு...

ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக அறிவிப்பு.

Mar 19, 2024 - 10:54
தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா... சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு...

தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமாவை தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், நேற்று (மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்தார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை தனது பதவிகளை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

இதனிடையே ராஜினாமா குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "தீவிரமான மக்கள் பணி செய்யவே, மனமுவந்து ராஜினாமா செய்ததாக கூறினார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கு நன்றியுடையவராக இருப்பேன் எனவும், மாறுபட்ட கட்சியின் அரசியல்வாதிகள் என்னுடன் சகோதரத்துவத்துடன் பழகிய அனுபவம் கிடைத்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து, நேரடியாக, நேர்மையான அரசியலுக்கு வருவதே என்னுடைய விருப்பம்" எனவும் அவர் கூறினார். 

இந்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், அவர் வகித்து வந்த தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகள், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow