திருப்பதி லட்டு விவகாரம் - சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றியமைக்க உத்தரவு
திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன் வைத்தார். இக்குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி ற்போது உச்ச நீதிமன்ற விசாரணை வரை சென்றுள்ளது.
திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் விவகாரம் பற்றி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மூன்றாவது நாளாக இன்று காலை விசாரணை நடைபெற்றது.
அப்போது கலப்பட நெய் விவகாரத்தை விசாரிக்க ஆந்திர மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு விசாரணைக் குழு ஒரு சில மாற்றங்களுடன் தொடர அனுமதித்த உச்சநீதிமன்றம், சிபிஐ மூத்த அதிகாரி பரிந்துரைக்கும் சிபிஐ அதிகாரிகள் இரண்டு பேர், ஆந்திர மாநில போலீஸ் துறை பரிந்துரைக்கும் போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவாக சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றி அமைத்து விசாரணையை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் அதிக பக்தர்கள் வருகை தரும் கோயில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்தான். ஆகவே, இந்த விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை தொடர்பானது என்பதால் இவ்விவகாரத்தில் அரசியலுக்கு இடம் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
What's Your Reaction?