யார்க்கர் கிங் நடராஜன்.. பரிசாக 80 சவரன் தங்க செயின்.. மீண்டும் Form-க்கு வந்த நட்டு...

யார்க்கர் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன் நடப்பு ஐபிஎல் சீசனில் அசத்தலாக பந்து வீசி வரும் நிலையில், ஐதராபாத் அணி சார்பாக தங்க செயின் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

Apr 22, 2024 - 08:05
Apr 22, 2024 - 08:13
யார்க்கர் கிங் நடராஜன்.. பரிசாக 80 சவரன் தங்க செயின்.. மீண்டும் Form-க்கு வந்த நட்டு...

சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து வந்து, கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து வருகிறார் நடராஜன். குறிப்பாக யார்க்கர் வீசுவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் டி.என்.பி.எல் போட்டிகள் மூலம் முதல்முறையாக 2017ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அதைதொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஐதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 

பின்னர் கொரோனாவுக்கு இடையே பல போராட்டங்களுக்கு மத்தியில் நடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தான் நடராஜன் ஜொலிக்க தொடங்கினார். அப்போது கேப்டனாக இருந்த வார்னர், நடராஜனை சரியாக பயன்படுத்தினார். ஒவ்வொரு போட்டியிலும் தனது அசாத்திய யார்க்கர் பந்துகளால் எதிரணியினரை ஸ்தம்பிக்க வைத்தார். இதனால் யார்க்கர் கிங் என்றும் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

அதன்மூலம் இந்திய அணிக்கு தேர்வான அவர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு உலக கிரிக்கெட் ஜாம்பவான்களால் புகழப்பட்டார். 29 வயதில் தான் முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியதால் அவருக்கு தொடர்ந்து தன்னை தக்கவைக்க வேண்டிய நிலை இருந்தது. ஏனெனில் வயது அவருக்கு ஒரு தடையாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கருதப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வினை அவரை சூழ்ந்தது. அவர் அடுத்தடுத்து இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தொடர்ந்து ஐபிஎல்லிலும் அவர் பெரிதாக ஸ்தோபிக்கவில்லை. 

ஜாகீர் கானுக்கு மாற்றாக ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரை இந்திய அணி எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் நடராஜன் வந்திருந்தாலும், தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பல மூத்த வீரர்கள் பிசிசிஐ-ஐ சாடியதாகவும் சொல்லப்பட்டது. 

ஒற்றை நம்பிக்கையாக அவரை ஐதராபாத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டே இருந்த வேளையில் வார்னருக்கு பின் மீண்டும் கெயின் வில்லியன்சன், மார்க்ரம் என ஐதராபாத்தின் கேப்டன்கள் மாறிக்கொண்டே இருந்தனர். அணியின் தொடர் சொதப்பல் ஆட்டங்களை போல நடராஜன் ஆட்டத்தில் தொய்வே தெரிந்தது. 

இந்நிலையில், இந்தாண்டு சீசனில் புது உற்சாகத்துடன், பேட் கம்மின்ஸ் என்ற ஆஸ்திரேலிய கேப்டனின் தலைமையில் ஐதராபாத் களமிறங்கியது. அதன்பின் சிறப்பான கம்-பேக்கை கொடுத்து போட்டிக்கு போட்டி ரன் குவிப்பில் சாதனை செய்து வருகிறது. இதேவேளையில், நடராஜனும் தனது பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அவர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே ஐபிஎல்லில் அவரது புது ரெக்கார்ட் ஆகும். 

இதனை கவுரவிக்கும் விதமாக நடராஜனுக்கு அணி சார்பாக 80 பவுன் தங்க செயின் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரருக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அதன்படி, அந்த போட்டிக்கு பின் நடராஜனுக்கு வழங்கப்பட்டது. அதை அணிந்துகொண்டு அவர் கேக் வெட்டிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

வார்னர் பின்னர் கம்மின்ஸ் என இரு ஆஸ்திரேலிய கேப்டன்கள் அவரை சரியாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இந்திய கேப்டன்கள் தான் அவரை கைவிட்டுவிட்டனர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனால், வருகிற டி20 உலகக்கோப்பையில் அவரை அணியில் இணைந்துகொண்டு சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக ஜாகீர் கான் போன்ற இடதுகை பந்துவீச்சாளர்கள் அவரை வழிநடத்தினால் எதிரணியனரை திணறடிக்கும் வீரராக அவர் மாறுவர் என்பது மூத்தவீரர்களின் கருத்தாகவும் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow