ரூ.16,500 பயிர்க்கடன் வழங்க இலக்கு.. 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.7,000 கோடி..! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

நடப்பாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Feb 20, 2024 - 12:47
ரூ.16,500 பயிர்க்கடன் வழங்க இலக்கு.. 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.7,000 கோடி..! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

நடப்பாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சூரிய மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 75,000 மீட்டர் நீளம் சூரிய மின்வேலி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நெல் நாற்று நடவு இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த 60% மானியம் வழங்கப்படும் என அறிவித்த அவர், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நடமாடும் தானிய உலர்த்திகள் வழங்க ரூ.2.50 கோடியும், சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம் ரூ.16.13 கோடியில் நிறுவப்படும் எனவும் 100 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ரூ.50 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்கும் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்த ரூ.9 கோடியும் 7 மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உருவாக்க ரூ.43 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். 

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடியும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.7,000 கோடியும், விவசாயிகளுக்கு இலவச மின்சார கட்டண திட்டத்துக்கு ரூ.7,280 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ரூ.141 கோடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்படும் எனவும், ரூ.773.23 கோடி நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். நடப்பாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும்,புதிதாக நன்னீர் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow