பொன்முடி தொகுதியான திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தலா..? - சத்யபிரதா சாகு விளக்கம்
"தேர்தல் ஆணையத்திற்கு அளித்த பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதி தவறுதலாக இடம்பெற்றுவிட்டது"
பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் அமைச்சர் பதவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். தொடர்ந்து பொன்முடி பதவி வகித்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனிடையே பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதன் மூலம், பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் என்பது உறுதியானது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி இன்று (மார்ச் 16) அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் குறிப்பில் பொன்முடி தகுதி நீக்கம் காரணமாக திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் எனவும், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை எனவும் கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு அளித்த பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதி தவறுதலாக இடம்பெற்றுவிட்டது எனவும் அதனை உடனே நீக்கிவிட்டோம் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?