GOAT release Update: தளபதி விஜய் 'GOAT'ரிலீஸ்.. செப்.5ல் படம் வெளியாக காரணம் என்ன?

தளபதி விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தினம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விஜய் நடித்த GOAT படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Apr 11, 2024 - 14:53
Apr 11, 2024 - 15:02
GOAT release Update: தளபதி விஜய் 'GOAT'ரிலீஸ்.. செப்.5ல் படம் வெளியாக காரணம் என்ன?

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்த திரைப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும், கடந்த 6ஆம் தேதி பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.

இதனிடையே GOAT படத்தின் படப்பிடிப்பிற்காக பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கேரள ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 

இதனிடையே ரஷ்யாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அண்மையில் அங்கு, படப்பிடிப்பில் விஜய் விளையாடும் சிறிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. GOAT படம் பற்றி அடுத்தடுத்து வெளியான அப்டேட்கள் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் இன்று விஜய்யின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி GOAT படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்ட நிலையில் படத்தின் ஹீரோ விஜய்யும் அந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ஆசிரியர் தினம். அதற்கு 2 நாட்கள் கழித்து சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த படத்தை வெளியிடுகின்றனர். அது தவிர கடந்த 2011ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படத்தினை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட்டனர். அது பிளாக்பஸ்டர் திரைப்படமானது. அதனை மனதில் வைத்துதான் GOAT திரைப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow