அரியானா மாநிலத்தில் கோர விபத்து.. பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழப்பு.. ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தகவல்..
அரியானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியானா மாநிலம் மகேந்திர கர்க் மாவட்டம் நர்னால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து, இன்று (11.04.2024) காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். பேருந்து உன்ஹானி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் காவல்துறையினரும், பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும், ஓட்டுநர் மதுபோதையில் இருந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் விபத்துக்குள்ளான பேருந்தின் தகுதிச் சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், ரம்ஜான் விடுமுறை நாளான இன்று பள்ளி செயல்பட்டது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?