4ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.. டெல்லி சலோ பேரணி இன்று மீண்டும் தொடக்கம்..! உச்சகட்ட உஷார்..!

மத்திய அரசு உடனான 4ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் டெல்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.

Feb 21, 2024 - 07:32
4ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.. டெல்லி சலோ பேரணி இன்று மீண்டும் தொடக்கம்..! உச்சகட்ட உஷார்..!

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க அவசர சட்டம் இயற்ற வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயக்கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் தொடங்கினர். 

200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் விவசாயிகள் டெல்லி எல்லையில் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் முன்னதாக பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் விவசாயத் தலைவர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை, குறைந்த பட்ச ஆதார விலைக்கு விவசாயிகளிடம் இருந்து அரசுத்துறைகளே கொள்முதல் செய்யும் ஐந்தாண்டு திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியஅரசு உறுதியளித்தது.

 

முடிவுதொடர்பாக ஆராய 2 நாட்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்த விவசாயிகள், மத்தியஅரசின் முடிவால் எந்தப் பலனும் இல்லை என தெரிய வந்துள்ளதாகக் கூறி மீண்டும் போராட்டத்தை அமைதியான முறையில் தொடர்வதாக அறிவித்தனர். 

தொடர்ந்து ஷம்பு உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் முள்வேலிகள், கண்ணீர்புகைக்குண்டுகள், இரும்பு வேலிகளுடன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரியானா எல்லையில் விவசாயிகள் குழுவினர் சிலரை போலீசார் கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow