எடப்பாடிக்கே இரட்டை இலை.. தேர்தல் ஆணையம் உறுதி.. ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை பயன்படுத்த தடை இல்லை.
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக சின்னம், பெயர், லெட்டர்பேடு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிட்டால், சின்னத்தை முடக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கான சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்திடும் அதிகாரத்தை அதிமுகவின் அவைத் தலைவருக்கு வழங்க உத்தரவிட கோரி என ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மனு நேற்று 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், "தங்களிடம் உள்ள ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச் செயலாளர் என உள்ளது. எனவே, அதிமுக சார்பில் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவங்களில் கையெழுத்திடவும் இபிஎஸ்-க்கு அதிகாரம் உள்ளது. அதற்கு தடை இல்லை" எனவும் தெரிவித்திருந்தது. இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை பயன்படுத்த தடை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
What's Your Reaction?