பரபரப்பான அரசியல் சூழலில் நாளை சட்டசபை கூடுகிறது: தமிழக அரசின் உரையை ஆளுநர் வாசிப்பாரா?
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழக சட்டசபை கூட உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது. தமிழக அரசின் உரையை ஆளுநர் வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டம் நடைபெறுவது மரபு. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு கூட உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும்.
கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளுநர் உரை நிகழ்த்தும் கடைசி சட்டசபை கூட்டம் இது. வழக்கமாக தமிழக அரசின் சார்பில் தயாரித்து கொடுக்கப்படும் உரையை ஆளுநர் வாசிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையில் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து வருகிறார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பூர்த்தி செய்ய உள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, ஆளுநர் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6-ந் தேதி கூடிய தமிழக சட்டசபை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இப்படி கவர்னர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி, நாளைய சட்டசபை கூட்டத்தில் தமிழக அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா? அல்லது திமுக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?

