ஜனநாயகன் சென்சார் மறுப்பு: விஜய்-க்கு ஆதரவாக களமிறங்கும் காங்., தலைவர்கள்: அதிர்ச்சியில் அறிவாலயம்
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வரிசை கட்டி ஆதரவு கரம் நீட்டியிருப்பது அறிவாலயத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படம் வெளியீடுவதில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜயின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகது என்பதால், ரசிகர் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்தச் சூழலில், படத்தின் சென்சார் சான்றிதழ் விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் பெருந்தலைகளும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பதிவை நினைவுகூர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி
காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்த விவகாரத்தைக் கண்டித்தார். அவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக விஜய்யின் 'மெர்சல்' பட விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி எச்சரித்திருந்ததைச் சுட்டிக்காட்டி, தற்போது 'ஜனநாயகன்' படத்தைத் திட்டமிட்டே முடக்குவதன் மூலம் பிரதமர் மோடி தமிழர்களை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். சென்சார் போர்டைப் பயன்படுத்தி வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டு ரிலீஸை முடக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்சார் போர்டு அரசியல் ஆயுதமாகிறது: காங்கிரஸ் எம்பிக்கள்
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துக்களைப் பரப்பும் படங்கள் மக்களிடம் எடுபடாததால், அந்தக் தோல்வியைத் தாங்க முடியாத மோடி-ஷா அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சினிமாத் துறையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது என்றும், அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை வரிசையில் தற்போது தணிக்கை வாரியமும் எதிர்ப்புகளை மௌனமாக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
இதேபோல, எம்.பி. ஜோதிமணியும், மத்திய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பல கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் ஒரு படைப்பை அரசியல் காரணங்களுக்காக முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், எனவே தணிக்கை வாரியமே கலைக்கப்பட வேண்டியது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிவாலயம் அதிர்ச்சி
ஏற்கனவே, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நிலையில், அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விஜய்யின் படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து மத்திய அரசை எதிர்ப்பது, தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

