'நீட்' தேர்வுக்கு எதிராக... நாடு முழுவதும் 21ம் தேதி போராட்டம்... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு நடந்திருப்பதாக அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Jun 19, 2024 - 13:00
'நீட்' தேர்வுக்கு எதிராக... நாடு முழுவதும் 21ம் தேதி போராட்டம்... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!
காங்கிரஸ் போராட்டம்

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக வரும் 21ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

இந்தியாவில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மிக கடினமான இந்த தேர்வில் வெற்றி பெற முடியாமல் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனால் தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிராக உள்ளது. சமூகநீதிக்கு எதிராக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால் மத்திய அரசு இதற்கு செவிசாய்க்காமல் நீட் தேர்வை தொடந்து நடத்தி வருகிறது. இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு நடந்திருப்பதாக அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதாவது எப்போதும் இல்லாத வகையில் 67 பேர் முதலிடம் பிடித்து இருந்தனர். பெரும்பாலானோர் 720க்கு 720 மதிப்பெண்களும், 720க்கு 719 மதிப்பெண்களும் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. அதிலும் ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்து இருந்ததால் இந்த சந்தேகம் உறுதியானது.

இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, ''நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தேர்வு எழுதுபவர்களுக்கு சில காரணங்களால் காலவிரயம் ஏற்பட்டதால், சிலருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது'' என்று கூறியது. 

இதை எதிர்த்து நீட் தேர்வு எழுதியவர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பொதுநல தொடரப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ''நீட் தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் எனக்கூறி கூடுதலாக 60 முதல் 80 மதிப்பெண்கள் வரை தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ளது. 

தேசிய தேர்வு முகமை ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதால், நீட் தேர்வை எழுதிய பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மறுதேர்வு நடத்த வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. 

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, ''கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடத்தி, ஜூன் 30ம் தேதி முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண்களை கழித்து, அவர்களின் அசல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்'' என்று கூறியது.

இது தவிர குஜராத், பீகார் உள்பட சில மாநிலங்களில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் வெட்டவெளிச்சமானது. அதாவது மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாள்களை கசிய விட்டது, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்துள்ளது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஏராளமான இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் தேர்வை எழுதிய பல மாணவர்கள் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர்  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இந்நிலையில், 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் 21ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ''மே மாதம் நடந்த நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை கண்டித்தும் நீட் தேர்வுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாநில தலைநகரங்களிலும் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow