கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தாலும் போதைக்காக மலிவான பொருட்களை நாடி சென்று உயிரிழக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார். அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் சட்டவிரோத விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாராயம் குடித்து இனி எந்த உயிரும் போகக் கூடாது என உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இது குறித்து குறித்து கருத்து கூறியுள்ள ஜெயக்குமார், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த பின்னரும் திமுக அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
What's Your Reaction?