கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது: கவனம் ஈர்த்த நீதிபதி!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி, ஒரு பெண்ணே கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது என சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Apr 1, 2025 - 13:30
கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது: கவனம் ஈர்த்த நீதிபதி!
கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது: கவனம் ஈர்த்த நீதிபதி!

சத்தீஸ்கரில் தன் மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கணவர் நீதிமன்றத்தை நாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி மனுவை நிராகரித்துள்ளார் என சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியது. 

அந்த தீர்ப்பில், கோரிக்கை மனுவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ஐ மீறுவதாக உள்ளது என நீதிபதி குறிப்பிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக நீதித்துறை வட்டாரங்களில் கருதப்படுகிறது.

சத்தீஸ்கரில் உள்ள ராய்கரைச் சேர்ந்த நபருக்கு ஏப்ரல் 30, 2023 அன்று திருமணம் நடைப்பெற்றது. திருமணமான தம்பதிகள் கோர்பா மாவட்டத்தில் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே, சில மாதங்களில் தம்பதியினருக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 2024-ல், Bharatiya Nagrik Suraksha Sanhita (under section 144) -பிரிவின் கீழ் மனைவி சார்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனது கணவர் ஆண்மையற்றவர் என்றும், இது முன்னரே அவரது குடும்பத்தாருக்கு தெரிந்தும் என்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே, எனக்கு ஜூவனாம்சமாக மாதந்தோறும் ரூ.20,000 வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு கணவர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு, தன் மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தன் மனைவி தனது மைத்துனருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார் எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட குடும்ப நல நீதிமன்றமம் கட்ந்த அக்டோபர் 15 ஆம் தேதி, கணவர் தரப்பு குற்றச்சாட்டுகளை நிராகரித்து மனைவிக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

மேற்குறிப்பிட்ட உத்தரவினால் அதிருப்தி அடைந்த கணவர் தரப்பு, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் வர்மா, ”மனுதாரர் தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க விரும்பினால், அவர் மருத்துவ பரிசோதனை செய்யலாம் அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களை சமர்பிக்கலாம். அதைத் தவிர்த்து, ஒரு பெண்ணை கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-21ஐ மீறுவதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

”இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21- என்பது தனிநபரின் அடிப்படை உரிமைகளுக்கான இதயம் போல். அந்த சரத்து வாழ்வதற்கான உரிமையை மட்டும் உறுதி செய்வதல்ல அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது. (The right to life is not just about the right to survive. It also entails being able to live a complete life of dignity and meaning) பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். எனவே, எந்தவொரு பெண்ணையும் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது” என நீதிபதி அரவிந்த குமார் வர்மா தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் கருத்து இதுப்போன்ற வழக்குகளுக்கு இனி முன்னுதாரணமாக விளங்கும் என நீதித்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow