மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்- வரும் சனிக்கிழமை தமிழக சட்டமன்ற சிறப்புக்கூட்டம்?
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பு மசோதாக்களை திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.இதுகுறித்து ஆலோசிக்க வரும் சனிக்கிழமை சட்டமன்ற சிறப்புக்கூட்டம் கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சனாதன விவகாரம், நீட் ரத்து மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா, சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் போன்றவற்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருப்பி அனுப்பி உள்ளார். மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு தலைமைச்செயலகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், சனிக்கிழமை(18ம் தேதி) தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பு மசோதாக்களை திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கில் மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?