மயிலாடுதுறை: வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 35 ஆண்டுகளாக திருட்டு - இருவர் கைது
35 ஆண்டுகளாக திருடியவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி மீனா பாராட்டினார்
மயிலாடுதுறை அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 35 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் திருடிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் சிறுபுலிநாயனார் வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார்.அவரது வீட்டின் கதவை உடைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்கள் ஐந்தரை பவுன் நகையை திருடிச்சென்றனர்.இதேபோல் பாலையூர் போலீஸ் சரகத்திலும் ஒரு வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச்சென்றனர்.
இது குறித்து செம்பனார்கோவில் மற்றும் பாலையூர் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து மாவட்ட எஸ்.பி மீனா, உதவி ஆய்வாளர் இளையராஜா ஆத்மதாதன் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று செம்பனார்கோவில் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்களில் ஒருவர் ராமநாதபுரத்தைச்சேர்ந்த பாண்டியன் (60) என்பதும், மற்றொருவர் நாகை மாவட்டம் கொத்தவாசல்பாடியைச்சேர்ந்த சேகர் (57)என்பதும், உறவினர்களான இவர்கள் இருவரும் ஆக்கூரில் வாடகைக்கு வீடு எடுத்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டுகளை அரங்கேற்றுவதும் தெரியவந்தது.இதில் சேகர் என்பவன் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேகர் கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் வீட்டின் கதவை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், கடந்த மாதம் ஆக்கூரில் சங்கர் என்பவரது வீட்டுக்கதவை உடைத்து ஐந்தரை பவுன் நகைகளை திருடிச்சென்றதும் தெரிந்தது. இதனைத்தொடர்ந்து பாண்டியன், சேகர் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 44 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
35 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பல்வேறு இடங்களில் திருடியவரை கைது செய்த தனிப்படை போலீசாரை மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி மீனா பாராட்டினார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?