ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா - மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருதினை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, தொழிலதிபர் என்பதைத் தாண்டியும் மிகச்சிறந்த மனிதர் என்கிற நற்பெயரைப் பெற்றவர். டாடா நிறுவனத்தின் சொத்துகளில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களின் வழியே பொதுமக்களுக்கான சேவைகளுக்காக அளித்தார். மிகவும் எளிமையான மனிதராகத் திகழ்ந்த ரத்தன் டாடா வளமான தேசத்தை உருவாக்க தன்னாலான மிகப்பெரும் பங்களிப்பினை தன் வாழ்நாள் முழுவதும் செய்தார்.
ரத்தன் டாடாவை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளவும், அவரைக் கொண்டாடுவதற்கும் பல செயல்களைச் செய்திருக்கிறார். கொரோனா என்னும் பெருந்தொற்றுக் காலத்தில் அவசர நிலையில் நாடே தத்தளித்த போது, ரத்தன் டாடா அரசுக்கு 1500 கோடி ரூபாயை முதல் தவணையாகக் கொடுத்து உதவியதை என்றைக்கும் மறக்க முடியாது. இப்படியாக இச்சமூகத்துக்காக சிந்தித்த, செயலாற்றிய மாமனிதர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக மறைந்த நிலையில், சமூகத்துக்கான அவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்ற்பட்டிருக்கிறது.
மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
What's Your Reaction?