"எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது" - முதலமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்

போதைப்பொருள் புழக்கம் குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் -அண்ணாமலை

Mar 14, 2024 - 15:28
"எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது" - முதலமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்
அண்ணாமலை, பாஜக

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு மூலம் எங்கள் குரலை முடக்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். முன்னதாக, ஜாபர் சாதிக் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்தநிலையில், அவரின் கைதுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் திமுகவை கடுமையாக விமர்சித்தனர். 

இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் தன்னை தொடர்புப்படுத்தி பேசுவதாக, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

"சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் அவர்களே? மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. 

தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம்." என அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow