மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி மக்களை பற்றி சிந்திக்காமல், கார்ப்ரேட்களை பற்றி சிந்தித்து விலைவாசி உயர்வுக்கு காரணமாகியிருக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி கொடுத்ததை மறந்துவிட்டு, இளைஞர்களை பகோடா சுட சொன்னவர் அவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், நடுநிலை வாக்காளர்களும் பாஜகவின் உண்மை முகத்தை தெரிந்துக் கொண்டனர். தேர்தல் பத்திர ஊழல் மூலம் மோடியின் கிளீன் இமேஜ் என்ற முகமூடி கிழிந்து உண்மையான முகம் பட்டவர்த்தமாக தெரிந்து விட்டது. ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டினால், வேந்தராக மோடியை தவிர வேற யாரும் அதற்கு பொறுத்தமாக இருக்க மாட்டார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடப்பது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல்… இந்தியா கூட்டணி ஆள வேண்டும் என்று திமுக சொல்கிறது… ஆனால், அதிமுகவையும் பழனிசாமியையும் கேட்டால் யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல், யார் ஆள கூடாது என்பதையும் சொல்லாமல் களத்திற்கு வந்திருக்கிறார் என்று கூறினார்.
யார் தான் உண்மையான எதிரி என்று தெரியாமல், எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவு இல்லாமல், பி டீமாக பாஜகவிற்கு ஆதாயம் தேடித்தரக் கூடிய களத்திற்கு வந்துள்ளார் பழனிசாமி. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தவர்கள் லிஸ்ட் டிவி சீரியல் போல் நீண்டுக் கொண்டே போகும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.