போடுங்கம்மா ஓட்டு! பெரிய பானைய பார்த்து... 100 கிலோ பானை செய்த விசிக நிர்வாகி

பானையை உருவாக்கிய காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு டிரெண்டாகி வருகிறது.

Apr 5, 2024 - 18:10
போடுங்கம்மா ஓட்டு! பெரிய பானைய பார்த்து... 100 கிலோ பானை செய்த விசிக நிர்வாகி

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனுக்கு அவர் விரும்பியது போலவே பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விசிக நிர்வாகி ஒருவர் புதுச்சேரியிலிருந்து 100 கிலோ எடை கொண்ட பிரமாண்ட பானை ஒன்றை வடிவமைத்து சிதம்பரம் பிரசாரத்துக்காக அனுப்பி வைத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் களத்தில் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களைக் கவரும் வகையில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதில் அரசியல் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களை மக்கள் மனங்களில் பதிய வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதில், திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. விசிகவுக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அக்கட்சிக்கு பானைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விசிகவிற்கு பானைச் சின்னம் கிடைத்துள்ளது. 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் வகையில் 100 கிலோ எடை கொண்ட பானை ஒன்றை புதுச்சேரியைச் சேர்ந்த விசிக நிர்வாகி ஒருவர் செய்து அனுப்பியுள்ளார். 7 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்ட மண் பானை வடிவமைக்கப்பட்டு, புதுச்சேரியிலிருந்து சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் பானையை உருவாக்கிய காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு டிரெண்டாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow