மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தர்ராஜன்...! பழைய உறுப்பினர் எண்ணிலேயே ரீ-என்ட்ரீ!
தமிழகத்தின் ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பதை கட்சி தலைமை அறிவிக்கும் -தமிழிசை சௌந்தர்ராஜன்
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று முன்தினம் பதவி விலகிய நிலையில் சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருகை தந்து தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆளுநர் பதவியை விட பாஜக உறுப்பினர் என்ற பதவியையே நான் பெருமையாக கருதுகிறேன். பல மாநில அரசுகள் ஆளுநரை நட்புணர்வோடு கையாள்வதில்லை. ஆளுநராக இருந்த இந்த நான்கரை ஆண்டுகளில் ஏராளமான சவால்களை சந்தித்துவிட்டேன். ஆளுநராக இருந்து விட்டு தற்போது கஷ்டமான முடிவை நான் எடுத்திருப்பதாக தம்பி அண்ணாமலை தெரிவித்தார். இது எனது கஷ்டமான முடிவு அல்ல இஷ்டமான முடிவு. தமிழகத்தின் ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பதை கட்சி தலைமை அறிவிக்கும்.தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என தெரிவித்தார்.
முன்னதாக கமலாலயத்தில் தமிழக பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி , பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து, தமிழிசைக்கு 19990-ல் பாஜகவில் இணைந்தபோது வழங்கப்பட்ட உறுப்பினர் எண்ணே தற்போது மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.
What's Your Reaction?