தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்த பஸ்.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. உளுந்தூர்பேட்டையில் சோகம்
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நாகர்கோயிலில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து விபரம் அறிந்த உள்ளூர்வாசிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காததால் சர்வீஸ் சாலையில் பேருந்து சென்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விபத்து தொடர்பாக எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?