”மிகக் குறைந்த விலையில் பட்டாசு”..நீங்களும் இந்த ஆன்லைன் விளம்பரத்த பார்த்தீங்களா? அப்போ உஷாரா இருங்க!
தீபாவளிக்காக ஆன்லைனில் பட்டாசு வாங்க விரும்புவர்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் உஷாராக இருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் போன்றே, இப்போது தீபாவளிக்காக ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக விளம்பரங்கள் அணிவகுக்கின்றன. ஆனால் இந்த விளம்பரங்கள் எல்லாம் ஆசைத் தூண்டில் போட்டு உங்கள் பணத்தை அபகரிக்கின்றன என அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு.
கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் தேசிய சைபர்கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் இந்த பட்டாக விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தீபாவளி காலத்தில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடிகள் அதிகரித்திருப்பதாக தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் எச்சரிக்கின்றனர்.
தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக கவர்ச்சிகரமாக வெளியிடப்படும் விளம்பரங்களில் கூறப்பட்டிருக்கும், எண்களைத் தொடர்பு கொள்ளூம்போது, மர்மநபர்கள் பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைப்பதாக ஆசைவார்த்தைக் கூறுவதோடு, அதற்கான இணையதள லிங்க்கையும் அனுப்புகிறார்கள்.
அதில் பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்து காண்பிக்கப்படும். ஆனால் பணம் செலுத்தியவுடன் ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகிறார்கள். மேலும், இந்த வலைதளங்களிலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனர். என்கிறார்கள் சைபர் க்ரைம் போலீசார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுவதோடு, கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிகாரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது என்று எச்சரிப்பவர்கள், பண்டிகைக்காலங்களில் இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் உஷாராக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளனர்.
What's Your Reaction?






