சென்னையை சூறையாடிய மிக்ஜாம்... தமிழகத்திற்கு ரூ.276 கோடி மட்டுமே நிதி.. கர்நாடகாவிற்கு 3,454 கோடி வறட்சி நிவாரணம்

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் வறட்சி நிவாரண நிதியாக 3,454 கோடி கொடுத்துள்ளது மத்திய அரசு.

Apr 27, 2024 - 11:47
சென்னையை சூறையாடிய மிக்ஜாம்... தமிழகத்திற்கு ரூ.276 கோடி மட்டுமே நிதி.. கர்நாடகாவிற்கு 3,454 கோடி வறட்சி நிவாரணம்

வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் வங்கக்கடலில் புயல் உருவானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் சென்னையில் 2 நாட்களுக்கு பெருமழை கொட்டித்தீர்த்தது. 

மிக்ஜாம் புயலில் தாக்கத்தால் பெய்த பெருமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. 

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. போக்குவரத்து. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவே 10 நாட்களுக்கு மேலானது. 

இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 6,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களை சீர் செய்ய மத்திய அரசிடம் சுமார் 37,000 கோடி ரூபாய் வழங்கும்படி தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருந்தது.

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலிலும் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யாதது பற்றி மத்திய அரசுக்கு எதிராக பிரசாரத்தை முன் வைத்தனர். 

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு 397 கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

மிக்ஜாம் நிதியான 285 கோடி ரூபாயில், 115 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியான 397 கோடி ரூபாயில் 160 கோடி ரூபாயும் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. பல ஆயிரம் கோடி நிவாரணமாக தமிழ்நாடு அரசு கேட்டும் மத்திய அரசு சார்பில் சில நூறு கோடி ரூபாய் மட்டுமே ஓதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.  அதே நேரத்தில் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரண நிதியாக 3,454 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த நிவாரணம் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow