சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால் சுட்ட வழக்கு... குஜராத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்...
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் சென்ற பாதையை பின் தொடர்ந்து சென்று குஜராத்தின் புஜ் நகரில் வைத்து கைது செய்தனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 மர்மநபர்களை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் உள்ள சல்மான்கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பு முன் நேற்று முன்தினம் ( ஏப்ரல் 14 ) அதிகாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் வீட்டை நோக்கி பல ரவுண்ட் சுட்டுள்ளனர். சல்மான்கான் வீட்டிற்குள் இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியது. இருப்பினும் இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து சல்மான்கான் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த சம்பவத்திற்கு பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய தாதா லாரன்ஸ் பிஸ்னாயின் சகோதரர் பொறுப்பேற்றார். தாதா லாரன்ஸ் பிஸ்னாய் பல மாதங்களாக சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த அவர், தற்போது திகார் சிறையில் உள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் சென்ற பாதையை பின் தொடர்ந்து சென்று குஜராத்தின் புஜ் நகரில் வைத்து கைது செய்தனர்.
அவர்களை மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்த போலீசார், லாரன்ஸ் பிஸ்னாயின் சகோதரரின் உத்தரவில் இதை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்ட அவர்கள், மும்பையின் மவுண்ட் மேரி சர்ச் அருகே ஒரு பைக்கை திருடியுள்ளனர். அதை எடுத்துக்கொண்டு சல்மான்கான் வீட்டுக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு, குஜராத்துக்கு தப்பிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?