சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு ரிசல்ட்.. சென்னை மண்டலத்தில் 99.30% பேர் தேர்ச்சி
தேர்வெழுதிய மாணவர்களில் 12-ம் வகுப்பில் 87.98% மாணவர்கள் தேர்ச்சி
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டிய இணையதள முகவரியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்வர். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வுகள் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு கடந்த பிப்ரவரி 15-ல் தொடங்கின. பின்னர் 10-ம் வகுப்புக்கு மார்ச் 13ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு ஏப்ரல் 2-ம் தேதியும் தேர்வுகள் முடிவடைந்தன.
கடந்தாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பில் 93.12% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதேபோல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.68% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை அறிந்துகொள்ளும் வலைதள முகவரியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, cbseresults.nic.in என்ற வலைதளத்தில் சென்று, தங்கள் ரோல் நம்பர்களை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வெழுதிய மாணவர்களில் 12-ம் வகுப்பில் 87.98% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 91% மாணவிகளும், 84.6% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 93.60% மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், சென்னை மண்டலம் 99.30% பேர் தேர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94 .75 சதவீதமும் மாணவர்கள் 92.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தேர்வெழுதிய நுழைவு சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டன.
What's Your Reaction?