சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்... தபால் வாக்குச்சீட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை...

Mar 16, 2024 - 14:05
சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்... தபால் வாக்குச்சீட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை...

நாடாளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தபால் வாக்குகளை அச்சடிப்பது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பது மற்றும் பாதுகாப்பாக கொண்டு செல்லும் பணிகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய  தேர்தல் ஆணையம் சுற்றிக்கை அனுப்பி உள்ளது. 
அதில் தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணியை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும் எனவும் தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் தொடர்பான விவரங்களை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம் எனவும் ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களை இட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை அச்சடிக்கும் பணியில் போதுமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை மாவட்ட தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் எனவும் தபால் வாக்குச்சீட்டுகளில் வேட்பாளரின் பெயர்,  சின்னம், வரிசை எண் ஆகியவை சரியாக அச்சடிக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடித்த பிறகு, அவற்றை அந்த அச்சகத்தின் பொறுப்பாளர் உதவி தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், அச்சகத்தில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் தபால் வாக்கு சீட்டுகள் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகள் அனைத்தும் ஒரு இரும்புப்பெட்டியில் வைக்கப்பட்டு, தனி அறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் வெளியிட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow